அரசாங்கத்தை எச்சரிக்கிறார் தொழிற்சங்க தலைவர்

இந்த செய்தியைப் பகிர்க

வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் அகதிகளாக வாழ்ந்து வருகின்ற நிலையில் பாகிஸ்தானிய அகதிகளை வவுனியாவில் குடியேற்ற அரசாங்கம் எடுத்து உள்ள நடவடிக்கை முற்றிலும் இயற்கையான நீதிக்கு விரோதமான விடயம் ஆகும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

இது குறித்து இவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டு உள்ளவை வருமாறு

30 வருட கால யுத்தமும், யுத்தத்தின் எச்சமும் கொடுத்த வடுக்களில் இருந்து வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் இன்னமும் முழுமையாக மீளவே இல்லை. வடக்கு, கிழக்கு மாகாண மக்களில் கணிசமான தொகையினர் இன்னமும் அகதிகளாக, ஏதிலிகளாக, அநாதர்களாக அல்லல்பட்டு கொண்டு இருக்கின்றனர். இவர்களை இயல்பான வாழ்க்கைக்கு மீட்டு கொண்டு செல்வதற்கான வேலை திட்டங்களில் அரசாங்கம் தீவிர அக்கறை செலுத்த வேண்டி இருக்கின்றது. நிலைமை இவ்வாறு இருக்க பாகிஸ்தானிய அகதிகளை வவுனியாவில் குடியேற்ற அரசாங்கம் எடுத்து உள்ள நடவடிக்கை இயற்கையான நீதிக்கு விரோதமான விடயம் மாத்திரம் அல்ல விபரீதமும் ஆகும். இதன் மூலமாக வவுனியா மக்களின் வாழ்வியல் அம்சங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்படைய நேரும் என்று நாம் நம்புகின்றோம்.

வட மாகாண ஆளுனருக்கு தெரியாமல், வவுனியா அரசாங்க அதிபருக்கு தெரிவிக்கப்படாமல் பாகிஸ்தானிய அகதிகளை வவுனியாவில் குடியேற்ற அரசாங்கம் முனைப்பு காட்டி உள்ளது. இம்மாகாணத்தை சேர்ந்த மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் வெளிப்படையாகவே அரசாங்கத்தின் இத்திட்டத்தை அடியோடு நிராகரித்து உள்ளனர். ஆயினும் இவற்றையும் மீறி பாகிஸ்தானிய அகதிகளை வவுனியாவில்தான் குடியேற்ற வேண்டும் என்று அரசாங்கம் அடம் பிடிக்கின்றது. இதனால் வவுனியாகிஸ்தான் ஒன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டு சதி செய்வதாகவே நாம் பெரிதும் ஐயுறவு கொள்ள நேர்கின்றது. இது தொடர்பில் அரசாங்கம் மக்களின் கருத்துகளுக்கு செவி சாய்த்து நடக்க தவறுகின்ற பட்சத்தில் மக்கள் போராட்டங்கள் வெடிப்பது தவிர்க்க முடியாததாக இருக்கும் என்பதையும் இத்தருணத்தில் சொல்லி வைக்கின்றேன்.

நாங்கள் பாகிஸ்தானிய அகதிகளுக்காக அனுதாபப்படுகின்றோம். அவர்களுடைய வாழ்க்கை செழிப்படைய வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம். எங்களால் முடிந்த பொருளாதார உதவிகளைக்கூட அவர்களுக்கு செய்ய காத்திருக்கின்றோம். ஆயினும் அவர்கள் வவுனியாவில் மாத்திரம் அல்ல வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எந்தவொரு இடத்திலும் குடியேற்றப்படுவதை நாம் ஏற்று கொள்ளவே முடியாது. அவர்கள் தெற்கில் குடியேற்றப்பட்டு இருந்தனர். எனவே தெற்கில் பாதுகாப்பான இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்படுவதே ஏற்படையதும் பொருத்தமானதுமான செயற்பாடு ஆகும். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் அரசாங்கம் அவர்களை குடியேற்றுவதை தவிர இது விடயத்தில் எந்தவொரு மாற்று ஏற்பாட்டுக்கும் உள்நாட்டில் இடம் கிடையாது என்பதை அரசாங்கம் உணர்ந்து பாகிஸ்தானிய அகதிகளை வவுனியாவில் குடியேற்றுகின்ற திட்டத்தை உடனடியாக மறந்து விட வேண்டும்.

Add a Comment