டென்மார்க் அழகி போட்டியில் அசத்தும் ஈழ தமிழிச்சி

இந்த செய்தியைப் பகிர்க

டென்மார்க்கில் வருடாவருடம் நடைபெறும் மிஸ் யூனிவேர்ஸ் எனப்படும் அழகுராணி போட்டியில் முதல் தடவையாக ஈழத் தமிழ் பெண்மணியான நர்வினி டேரி ரவிசங்கர் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த வாரம் டென்மார்க் தலைநகர் கோப்பன்கேகனில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது இது மூன்று முக்கிய பிரிவுகளாக நடைபெறும், முடிவில் டென்மார்க்கின் மிஸ் யூனிவேர்ஸ் தெரிவு செய்யப்படுவார்.

கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் இந்தப்போட்டியின் பல படிகளையும் தாண்டி ஓர் ஈழத்தமிழ் பெண் துணிகரமாக இறுதி சுற்றுக்கு முன்னேறியிருப்பது கவனிக்கத்தக்கது.

மிஸ் யூனிவேர்ஸ் என்ற பெயருடன் நடைபெறும் இந்தப் போட்டி தனியே டென்மார்க்கில் மட்டும் நடைபெறும் போட்டியல்ல, உலகாளாவிய மிஸ் யூனிவேர்ஸ் எனப்படும் போட்டியுடன் இணைந்த சர்வதேச போட்டியாகும்.

இதில் இறுதிச் சுற்றில் வெற்றி பெறுபவர் அடுத்த கட்டமாக அமெரிக்கா செல்ல வேண்டும். அங்கு உலகத்தின் மற்றைய நாடுகளின் வெற்றியாளர்களைச் சந்திக்க வேண்டும். அங்கு இவர்கள் இணைந்து தங்களுக்கு கிடைத்த அங்கீகாரத்தால் இந்த உலகத்தின் மேம்பாட்டுக்கு செய்ய வேண்டிய உயர் கருமங்கள் யாதென சிந்திக்க வேண்டும், இணைந்து செயற்பட வேண்டும்.

1924 முதல் டென்மார்க்கில் அழகுராணி போட்டி நடைபெற்று வருகிறது. 1924ம் ஆண்டு டென்மார்க்கில் நடைபெற்ற முதலாவது அழகுராணி போட்டியில் வெற்றி பெற்றவர் எடித் யொகான்சன் என்ற டேனிஷ் அழகியாகும். அன்று தொடங்கி இன்று வரை டென்மார்க்கில் நடைபெறும் போட்டிகளில், அவ்வப்போது வெளிநாட்டவர்கள் பங்கேற்றாலும் இப்போதுதான் முதற் தடவையாக தமிழ் பெண் ஒருவர் பங்கேற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டென்மார்க்கின் முதலாவது மிஸ் யூனிவேர்ஸ் தமிழ் போட்டியாளரான நர்வினி டேரி ரவிசங்கர் டென்மார்க் ஒல்போ பல்கலைக்கழகத்தில் சமூக நலத்துறையில் முதுமாணி கற்கை கற்கும் மாணவியாகும். இவருடைய பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள் போர் காரணமாக தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து, அங்கிருந்து ஒன்பது வயதில் டென்மார்க் வந்தவராகும். திரைப்படம் நடித்தல், காணொளிகளை தயாரித்தல், நடித்தல், பாடல்கள் எழுதி இயக்குதல், சமுதாயப் பணிகளை முன்னெடுத்தல் என்று பலதரப்பட்ட துறைகளில் முனைப்போடு செயற்பட்டு வரும் ஒருவராகும்.

உயிர்வரை இனித்தாய் என்பது நர்வினி டேரி நடித்த முதலாவது திரைப்படமாகும். இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த நர்வினி டேரி ரவிசங்கர் நோர்வே, சுவிற்சலாந்து திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். அத்திரைப்படத்தில் பாடல், ஒப்பனை என்று பல பகுதிகளில் பணியாற்றினார், மேலும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். இலங்கை, இந்திய கலைஞர்கள் இணைந்து உருவாக்கிய அப்படத்திலும் நர்வினி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் தமிழகத்திலும் இலங்கையிலும் திரைக்கு வரவுள்ளது.

டென்மார்க்கில் சமுதாய நலத்துறை சார் கல்வியை கற்றதோடு, இயல்பாகவே சமூக அக்கறை மிக்க பணிகளில் ஈடுபடுவதும் இவருடைய வாழ்வியல் பணியாகும். அந்தவகையில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக இவருடைய இயக்கத்திலும் எழுத்திலும் வெளியான காணொளிப் பாடல் ஒன்று சென்ற ஆண்டு நோர்வே திரைப்பட விழாவில் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டது.

மிஸ் யூனிவேர்ஸ் என்னும் போட்டியானது உடல் அழகை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல, பெண்களிடையே சுய நம்பிக்கையை வளர்ப்பதும், அவர்களை இந்த உலக மேம்பாட்டுக்காக பாடுபடும் ஆளுமையாளர்களாக உருவாக்குதல் போன்ற பல உன்னத பணிகளையும் உள்ளடக்கியதாகும். உணவுக்கட்டுப்பாட்டில் இருந்து உள்ளக்கட்டுப்பாடு வரை இதில் பல பயிற்சிகள் உண்டு. அத்தனை அம்சங்களிலும் தனித்துவமாக சிந்தித்து வெற்றி பெறும் ஒருவரே நிறைவாக வெற்றி முடியை சூட்டிக்கொள்ள முடியும்.

இந்த வெற்றி முடியை சூடும் ஒருவர் மனிதாபிமானத்தின் குரலாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அரசாங்கம், வணிக நிறுவனங்கள், நிதித்துறை, ஒளிபரப்பு, திரைப்படம் போன்ற பல்வேறு துறைகளிலும் பரிமளிக்க இப்போட்டியானது உந்து சக்தியாகவும் அமைகிறது. மேலும் இது டென்மார்க்கை மட்டும் எல்லையாகக் கொண்டதல்ல உலக நாடுகளுடன் இணைந்த பணியாகும்.

மிஸ் யூனிவேர்ஸ் எனப்படும் உலக அழகியாக வெற்றி பெற்றால் அந்தக் கிரீடத்தை வைத்து, சொந்த நாட்டிலும், அகில உலகத்திலும் மனித குலத்தால் தீர்க்க சவாலாக இருக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க அதை எவ்வாறு பயன்படுத்துவீர்கள் என்ற கேள்விக்கான விடையின் தனித்துவமும் இந்தப் போட்டியில் முக்கியம் பெறுகிறது. மேலும் ஒருவர் மிஸ் யூனிவேர்ஸ் என்ற போட்டியில் வெற்றி பெறுவதனால் சமுதாயம் அடையப்போகும் பயன் என்ன..? இதற்கு சரியான பதில் கொடுக்கும்விதமாக ஒன்றல்ல இரண்டல்ல அனைத்து ஆற்றல்களையும் வெளிப்படுத்த வேண்டும்.

இப்போட்டியில் ஒருவர் பங்குபற்றும் போதே அவரிடம் ஒரு தன்னம்பிக்கை மலர்ந்துவிடுகிறது. உலகம் முழுவதும் வருடம்தோறும் 10.000 பெண்கள் இப்போட்டிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு அது ஒரு சமுதாய அந்தஸ்த்தை வழங்குகிறது.

டென்மார்க்கில் நடைபெறும் மிஸ் யூனிவேர்ஸ் என்ற அழகு ராணி போட்டியானது தமிழர்களையும் இணைத்து முன்னேறும் டென்மார்க் நாட்டிற்கும் ஒரு தனித்துவத்தை கொடுக்கிறது என்றால் அது மிகைக்கூற்றல்ல.

Add a Comment