கோவிலுக்குள்ளே கற்பழித்து கொல்லப்பட்ட முஸ்லிம் சிறுமியின் வழக்கில் தீர்ப்பு

இந்த செய்தியைப் பகிர்க

காஷ்மீரில் உள்ள கத்துவா கிராமத்தை சேர்ந்த பழங்குடி சுன்னி முஸ்லிம் 08 வயது சிறுமியை கற்பழித்து படுகொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பஞ்சாப் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

இதே போல இவ்வழக்கோடு சம்பந்தப்பட்ட தடயங்களை அழித்ததற்காக மூன்று ஆண்களுக்கு தலா 05 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுமி அவருடைய குதிரைகளை தேடி சென்றபோதே கடந்த வருடம் ஜனவரி மாதம் கவர்ந்து அழைப்பித்து கடத்தி செல்லப்பட்டார். இது திட்டமிடப்பட்ட ஒரு சதியின் அம்சம் ஆகும்.

பின்னர் இவர் மயக்கம் அடைய செய்யப்பட்டு, பட்டினி போடப்பட்டு, இந்து கோவில் ஒன்றுக்குள் அடைக்கப்பட்டார். இவர் பல ஆண்களாலும் மாறி மாறி தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். ஒரு வாரத்துக்கு பின் படுகொலை செய்யப்பட்டார்.

இக்கற்பழிப்பு படுகொலை இந்தியாவையே உலுப்பியது. சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தது. இக்கோயிலின் நிர்வாகி சஞ்சிராம், இவரின் மகன், இவருடைய மகனின் நண்பர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இவ்வழக்கின் தடயங்களை அழித்ததற்காக மூன்று பொலிஸார், ஒரு சிறுவன் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டனர்.

சிறுமியை கற்பழித்து படுகொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர்கள் வலதுசாரி இந்துக்கள் ஆவர். இதனால்தான் இனவாத அரசியல் இதற்குள் தலை நீட்டியது. சிறுமியின் படுகொலையை மறைக்கின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறுமி கற்பழிக்கப்படவே இல்லை என்றும் சாதித்தனர்.

விசாரணை நடத்திய பொலிஸார், சிறுமியின் குடும்பத்தை ஆதரித்து ஆஜரான பெண் சட்டத்தரணி ஆகியோர் ஜம்முவை சேர்ந்த சட்டத்தரணிகளால் கடமையை செய்ய விடாமல் அச்சுறுத்தப்பட்டனர். இச்சட்டத்தரணிகள் இந்துத்துவத்துக்கு ஆதரவான சுலோகங்களை கோஷமிட்டனர். சிறுமியின் குடும்பத்துக்காக முதலில் ஆஜரான சட்டத்தரணி தீபிகா சிங் இனி மேல் ஆஜராக கூடாது என்று மிரட்டப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, எச்சரிக்கப்பட்டார்.

இவ்வழக்கு ஜம்முவில் நீதியாகவும், நேர்மையாகவும் இனவாத அரசியல் காரணமாக விசாரிக்கப்பட மாட்டாது என்று கண்டு கொண்ட இந்திய உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை 2018 ஆம் ஆண்டு மே 28 ஆம் திகதி பஞ்சாப் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது.

சிறப்பு நீதிமன்றத்துக்கு பூர்வாங்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. புலனாய்வாளர்கள் 130 சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்தனர். தடயவியல் மற்றும் மருத்துவ அறிக்கைகள், தொலைபேசி உரையாடல் பதிவுகள், கையடக்க தொலைபேசிகளின் லொகேசன்கள் ஆகியவற்றை சேகரித்தனர். இக்குற்ற செயலை திட்டமிட்டு, உதவி – ஒத்தாசைக்கு ஆட்களை ஒழுங்கு செய்து, பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து, சிறுமியை கவர்ந்து கடத்தி சென்று கற்பழித்து படுகொலை செய்தது தொடர்பான தெளிவான தோற்றப்பாட்டை நீதிமன்றத்துக்கு வெளிப்படுத்தினர்.

வழக்கில் பிரதான சூத்திரதாரியான சஞ்சி ராம், இவரின் நண்பரான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் தீபக் காயுரியா, பர்வேஸ் குமார் ஆகியோரே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளனர். இலஞ்சம் பெற்று கொண்டு தடயங்களை இவர்கள் அழிப்பதற்கு உதவி செய்ததற்காக சுரேந்திர வர்மா, ஆனந் டுப்தா, திலக் ராஜ் ஆகிய பொலிஸாருக்கே 05 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

வழக்கில் ஏழாவது எதிரியான சஞ்சி ராமின் மகன் குற்ற செயல் இடம்பெற்றபோது வேறு இடத்தில் இருந்ததாக ஆதரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. 08 ஆவது சந்தேக நபர் ஒரு சிறுவன் ஆவார். இவர்தான் சிறுமியை கவர்ந்து அழைப்பித்தவர் ஆவார். இவருடைய வழக்கு தனியான நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.

Add a Comment