தொன்மையான மருத்துவ விஞ்ஞானம் பிராண சிகிச்சை

இந்த செய்தியைப் பகிர்க

பிராண சிகிச்சை முறை மூலம் நோயாளிகளை தொடாமல், மருந்துகள் கொடுக்காமல் முழுமையாக எந்த நோயையும் குணப்படுத்த முடியும் என்கிறார் இலங்கையின் மூத்த பிராண சிகிச்சையாளர்களில் ஒருவரான தேவா சோமசுந்தரம். இவர் கொழும்பை வசிப்பிடமாக கொண்டவர். ஓய்வு பெற்ற சிவில் பொறியியலாளர்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவை தளமாக கொண்டு உலகின் பல நாடுகளிலும் இயங்கி வருகின்றன பிராண சிகிச்சை நிலையங்கள். இலங்கைக் கிளைக்குப் பொறுப்பானவராக இவர் இருக்கின்றார். தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது இச்சிகிச்சை நிலையம்.

அண்மையில் இங்கு செல்லும் வாய்ப்பு எமது பத்திரிகையாளர் குழுவுக்கு கிடைத்தது. அதிசயமான பல தகவல்களை எமக்குக் கூறினார் தேவா.

இவர் தெரிவித்த விடயங்களை எமது வாசகர்களுக்காக தொகுத்துத் தருகின்றோம்.

– பிராண சிகிச்சை என்பது மிகவும் தொன்மையான ஒரு மருத்துவ விஞ்ஞானம். நோயாளியைத் தொட தேவை இல்லை. மருந்துகள் கொடுக்க தேவை இல்லை. முழுமையாக எந்நோயையும் குணப்படுத்த முடியும். பக்க விளைவுகள் கிடையாது.

உடலுக்கு நோய்களை குணப்படுத்துகின்ற தன்மை இயல்பாகவே உள்ளது. உடம்புதான் நோயை குணப்படுத்துகின்றதே தவிர மருந்தோ அல்லது சிகிச்சைகளோ அல்ல. மருந்துகளும் சரி, சிகிச்சைகளும் சரி ஊக்கிகளாகவே செயல்படுகின்றன.

உதாரணமாக தடிமனுக்கு மருந்து கிடையாது. ஆனால் தடிமன் நாளடைவில் குணமாகி விடுகின்றது அல்லவா? அதாவது நோயை குணப்படுத்துகின்ற சக்தியை மருந்துகளும் சரி, சிகிச்சை முறைகளும் சரி உடலில் ஏற்படுத்துகின்றன அல்லது ஊக்குவிக்கின்றன என்பதே விளக்கம்.

மருந்துகள் செயற்கையாக இச்சக்தியை ஊக்குவிக்கின்றன. பிராணன் என்பது சக்தி. சுற்றாடலில் இருந்து அதாவது சூரியன், காற்று, பூமி, மரங்கள், தண்ணீர் போன்ற இயற்கை மூலங்களில் இருந்து சக்தியை பெற்று நோயாளிக்கு பிரயோகிக்கின்ற சிகிச்சை முறையே பிராண சிகிச்சை.

உடலில் உள்ள தீய சக்திகளை சுத்தம் செய்து விட்டு, நல்ல சக்திகளை வழங்குகின்றோம். இச்சிகிச்சை முறை மூலம் ஒருவரின் நோய், குறைபாடுகள் போன்றவற்றை முதலில் பிராண சிகிச்சையாளர் அடையாளம் கண்டு, அறிந்து கொள்வார்.

பின் உரிய சிகிச்சையை வழங்குவார். ஒருவர் இறந்து விட்டால் பிராணன் போய் விட்டது என்று நாம் கூறுகின்றோம் அல்லவா? பிராணன் அதாவது சக்தி உடலில் இருக்கும் வரை உயிர் இருக்கும். உடல் உறுப்புக்கள் சிறப்பாக இயங்க உதவுவது பிராணன்.

ஆதி காலத்தில் அரசர்மார், யோகிமார் இந்த விஞ்ஞானத்தை அறிந்து வைத்திருந்தனர். இந்தியா, சீனா, எகிப்து, இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் புராதன காலம் தொடக்கமே இச்சிகிச்சை முறை இருந்து வந்துள்ளது. ஆனால் இச்சிகிச்சை முறை சாதாரண மக்களுக்கு ஒரு தேவ இரகசியமாகவே காட்டப்பட்டு வந்திருக்கின்றது.

மாஸ்ரர் சோவா கோக் சூயி என்கிற பிலிப்பைன்ஸ் நாட்டு விஞ்ஞானி சுமார் இருபது வருடங்கள் ஆய்வுகள் நடத்தி இதை ஒரு மருத்துவ விஞ்ஞானம் என்று நிரூபித்து எவரும் இலகுவாக படித்து பயன் பெற கூடிய வகையில் புத்தகம் எழுதினார். இவர்தான் இம்மருத்துவ முறையின் நவீன தந்தை. இவரால்தான் உலகின் பல நாடுகளிலும் பிராண சிகிச்சை நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவர் 1995 ஆம் ஆண்டு இலங்கை வந்து இச்சிகிச்சை முறையை 80 மாணவர்களுக்கு கற்பித்துக் கொடுத்தார். அம்மாணவர்களில் நானும் ஒருவன். அதன் பின் 1997 ஆம் ஆண்டு இவ்வலுவலகம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

தமிழரின் அன்றாட வாழ்க்கையில் பிராண சிகிச்சை முறை காலம் காலமாக ஒன்றித்து இருந்து வந்துள்ளது. கண்ணூறு மற்றும் நாவூறு கழித்தல், ஆராத்தி எடுத்தல், வாழை மரம் நாட்டுதல், தோரணம் கட்டுதல், வீடுகளில் பூசணிக்காய் கட்டுதல் போன்றன உதாரணங்கள். இந்துக்களின் ஆலய வழிபாட்டிலும் இச்சிகிச்சை முறை இருக்கின்றது.

சுவாமியின் சிலைக்கு ஐயர் அபிசேகம் செய்கின்றார். மந்திர உச்சாடனங்கள் செய்கின்றார். அபிசேக நீரை தீர்த்தம் என்று தருகின்றார். உண்மையில் அங்கு என்ன நடக்கின்றது என்றால் அபிசேகம் செய்கின்றபோது மந்திர உச்சாடனங்கள் மூலம் சிலைக்கு சக்தியை கொடுக்கின்றார் ஐயர். அபிசேகத்துக்கு பயன்படுத்தப்பட்ட நீரில் அச்சக்தியை சேகரிக்கின்றார். தீர்த்தம் என்று சொல்லித் தருகின்றார். உண்மையில் தீர்த்தம் என்பது சக்தி ஏற்றப்பட்ட தண்ணீர்.

எல்லா சமயங்களிலும் பிராண சிகிச்சை முறை இருக்கின்றது. ஆனால் பிராண சிகிச்சை எந்தச் சமயத்துக்கும் சொந்தமானது அல்ல. பிராண சிகிச்சை முறையை நவீன வைத்திய உலகமும் ஏற்று அங்கீகரித்து உள்ளது. மலேசியா, கானா, டுபாய் போன்ற நாடுகளில் இது ஒரு மருத்துவ முறையாக அரசுகளால் அங்கீகரிக்கப்ப்பட்டு உள்ளது. அப்பலோ வைத்தியசாலைகளில் புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்குகின்றமைக்காக பிராண சிகிச்சை நிலையங்கள் உள்ளன.

இந்தியாவின் மங்களூர், தர்மபுரம், பங்களூர் பல்கலைக்கழகங்களில் இம்மருத்துவ முறை கற்பித்துக் கொடுக்கப்படுகின்றது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வைத்தியர்கள், தாதிமார், மசாஜ் சிகிச்சையாளர்கள், உள வள ஆலோசகர்கள் போன்றோருக்கு இம்மருத்துவ முறை கற்பித்துக் கொடுக்கப்படுகின்றது. அமெரிக்காவின் கலிபோர்னியா, நியூயோர்க், வோஷிங்ரன் போன்ற மாநிலங்களில் இதன் செல்வாக்குப் பல்கிப் பெருகி வருகின்றது.

இச்சிகிச்சை முறையை நாடி வருகின்றமையை கலிபோர்னியா மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

ஒற்றைத் தலை வலி, ஆஸ்மா, வயிற்று வியாதிகள், ஆதரைய்ட்டு, முதுகு வலி, இதய நோய்கள், மன அழுத்தம், பாலியல் பிரச்சினைகள், மாத விலக்கு பிரச்சினைகள், மகப்பேற்றுப் பிரச்சினைகள், நித்திரை இன்மை போன்ற இன்னோரன்ன நோய்களுக்கு இச்சிகிச்சை முறை மூலம் தீர்வு காணலாம். நீரிழிவு என்பது நோய் அல்ல. அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். சூப்பர் பிரைன் பயிற்சி மூலம் மூளையின் செயற்பாட்டுத் திறனை விருத்தி செய்யலாம்.

இலங்கையில் உள்ள எமது சிகிச்சை நிலையத்தில் இது வரை 5500 நோயாளிகள் சிகிச்சை பெற்று இருக்கின்றார்கள். நோயாளி வேறு ஒரு இடத்தில், வேறு ஒரு நாட்டில், வேறு ஒரு கண்டத்தில் இருந்தால் கூட இச்சிகிச்சையை இங்கிருந்தே வழங்க முடியும். அவ்வாறு சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளும் உள்ளனர்.

ஆனாலும் கூடுதலாக பயன் அடைவோர் சிங்கள மக்களே. எமது தமிழர்களுக்கு ஏதாவது ஒரு சேவையை பல்லாயிரக் கணக்கான ரூபாயை செலவு செய்து பெறுகின்றமையில்தான் நாட்டம். அல்லது இலவச சேவை பெற வேண்டும்.

ஆனால் தட்சணை வழங்கி சேவையை பெறுகின்றமையே உரிய பலனைக் கொடுக்கும். அத்துடன் தெய்வீக அற்புதங்கள் என்றால்தான் நம்மவர்கள் ஓடி வருவார்கள். எமது சிகிச்சை முறை இன்னமும் சாதாரண மக்களை இலங்கையில் முறையாக சென்று அடையவில்லை. ஓரளவு படித்தவர்களும், ஏனைய சிகிச்சை முறைகளில் நோய்க்கு தீர்வு காண முடியாதவர்களுமே எம்மை நாடி வருகின்றனர்.

இச்சிகிச்சை முறை மக்களின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றித்து இருந்தாலும் கூட பற்றிய உரிய விளக்கங்கள் இல்லாமையால் மூட நம்பிக்கை என்றே மக்கள் நம்புகின்றனர். அது தவறு.

மேலும் நாம் இச்சிகிச்சை முறை குறித்து எவருக்கும் விளம்பரம் செய்கின்றமை கிடையாது. சுய முயற்சியில் அறிந்து வருகின்றனர். எந்த வயதினரும் இச்சிகிச்சையை பெற முடியும். எம்மிடம் வருகின்றவர்களில் அநேகர் 35 வயதுக்கும் 85 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.வேறு சிகிச்சைகளை பெற்றுக் கொள்கின்ற அதே சமயத்தில் அல்லது ஆங்கில மருந்துகளை உட்கொள்கின்ற அதே நேரத்தில்கூட இச்சிகிச்சையை பெற முடியும். நம்பிக்கை என்பது மிகவும் பிரதானம் பிராண சிகிச்சையாளர் தூய எண்ணங்கள் உடையவராக, தற்பெருமை, கர்வம் ஆகியன இல்லாதவராக இருக்க வேண்டும்.

பிராண சிகிச்சையாளர் ஒருவர் மற்றவர்களுக்கு மாத்திரம் அன்றி சொந்த உடலில் ஏற்படுகின்ற நோய்களையும் குணம் ஆக்க முடியும். தற்போதைய பிராண சிகிச்சை முறைமையில் சிகிச்சையாளருக்கு எவ்வித பாதிப்புக்களும் நேர்ந்து விடாது. –

Add a Comment