காத்தான்குடியில் ஆயுத பயிற்சி பெற்றவர் கைது

இந்த செய்தியைப் பகிர்க

கிங்ஸ்பெரி ஹோட்டல் தற்கொலை குண்டுதாரியின் கொலன்னாவ இல்லத்தில் அராபிய பாடசாலை ஒன்றை திறப்பதற்கான விண்ணப்ப படிவம் அடங்கலாக ஆவணங்கள் பலவற்றையும் கண்டுபிடித்ததாக குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு இன்று தெரிவித்தனர்.

அத்துடன் தற்கொலை குண்டுதாரி அப்துல்லாவும் ஏனைய பல சந்தேக நபர்களும் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றனர் என்றும் எந்தரமுல்ல, நிந்தவூர் ஆகிய இடங்களில் வசித்துள்ளனர் என்றும் பதில் நீதிவான் ஜயந்த டயஸ் நாணயகாரவுக்கு தெரிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுகள் மீதான முன்னேற்றங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்து மேலும் தெரிவிக்கையில் அராபிய பாடசாலையை திறப்பதற்கான விண்ணப்ப படிவத்தில் செயலாளர் என்கிற பதவி நிலையில் கையொப்பமிட்டு உள்ள இமுராலெப்பை முஹமட் சாயித் என்பவரை தடுத்து வைத்து விசாரிப்பதாக முன்வைத்தனர்.

2014 ஆம் ஆண்டில் இருந்து அப்துல்லா தேசிய தௌஹீத் ஜமாத்தில் முன்னிலை செயற்பாட்டாளராக இருந்து வந்து உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சாயித்தை விசாரித்ததை தொடர்ந்து வெலிகமவை சேர்ந்த ஹம்சா என்பவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர் என்றும் அப்துல்லாவுடன் காத்தான்குடியில் ஆயுத பயிற்சி பெற்ற முஹமட் ஜசீல் என்பவரை தடுத்து வைத்து விசாரிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை அடுத்த மாதம் 10 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Add a Comment