தமிழர் தரப்பில் ஆஜரான முஸ்லிம் சட்டத்தரணி

இந்த செய்தியைப் பகிர்க

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கோரி கல்முனை தமிழ் மக்கள் சார்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பிக்கு உள்ளிட்ட உண்ணாவிரதிகளை ஆதரித்து இன்று திங்கட்கிழமை முஸ்லிம் சட்டத்தரணி ஒருவர் ஆஜரானதால் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரட்ண தேரர், கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ சு. கு. சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநாகர சபை உறுப்பினர்களான ஏ. விஜயரட்ணம், எஸ். இராஜன் ஆகிய உண்ணாவிரதிகள் சார்பாக சட்டத்தரணி தெய்வநாயகம் மதிவதனுடன் அக்கரைப்பற்றை சேர்ந்த மனித உரிமைகள் சட்டத்தரணி ஆதம்பாவா முஹம்மது பாருக் ஆஜரானார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுவதற்கு ஆதரவானதும், எதிரானதும் ஆன போராட்டங்களால் பொது தொல்லை உள்ளதாக கல்முனை பொலிஸ் நிலைய சிற்குற்ற பிரிவு பொலிஸார் தாக்கல் செய்த வழக்குகள் கல்முனை நீதிவான் ஐ. என். ரிஸ்பான் முன்னிலையில் அழைக்கப்பட்டன.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுவதற்கு ஆதரவான உண்ணாவிரதிகளும், எதிரான சத்தியாக்கிரகிகளும் எதிரிகளாக நீதிமன்றத்தில் நேரில் பிரசன்னமானார்கள்.

இதே நேரத்தில் சத்தியாக்கிரகிகளான முஸ்லிம் தரப்பினரை ஆதரித்து சட்டத்தரணிகளான அன்ஸார் மௌலானா, ஷாரிக் காரியப்பர், மனாருதீன், ஏ. எல். எம். ரமீஸ், பிறேம் நவாத், றைசுல் ஹாதி, கலீல் நூபா, சாமில் ஷாபி, அனோஜ் பிரதௌர்ஸ், றிப்கான், சமத் அப்சானா போன்றோர் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனை பொலிஸ் நிலைய சிறுகுற்ற பிரிவு பொலிஸார் வழக்கோடு சம்பந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்து போராட்டங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியுடன் முடிவுக்கு வந்து விட்டதாக தெரிவித்தனர்.

எதிரிகள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க வேண்டும் என்று நீதிவான் உத்தரவிட்டார். பொலிஸாரின் சார்பில் ஆஜரான பொலிஸ் சார்ஜன் அப்துல் ஹை கேட்டு கொண்டமைக்கு அமைய நீதிமன்றம் இவ்வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 02 இற்கு திகதி குறித்தது.

வழக்குகளின் எதிரிகள் நிபந்தனையின் பேரிலேயே போராட்டங்களை கை விட்டு உள்ளனர், மீண்டும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட சாத்தியம் உள்ளது என்று பொலிஸாருக்கு தகவல் கிடைத்து உள்ள அடிப்படையிலேயே நீண்ட அவகாசத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் பெற்று உள்ளனர் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment