அச்சத்தின் உச்சத்தில் முஸ்லிம் சமூகம்

இந்த செய்தியைப் பகிர்க

முஸ்லிம்கள் மீது கல்லெறிய வேண்டும் என்று முன்னிலை பிக்கு ஒருவர் தெரிவித்து உள்ள கருத்துகளின் பின்னணியில் மீண்டும் தாக்கப்படலாம் என்கிற அச்சம் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

முஸ்லிம் வைத்தியர் ஒருவர் ஆயிர கணக்கான பௌத்த பெண்களுக்கு கட்டாய கரு தடை மேற்கொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளார். இந்நிலையிலேயே முன்னிலை பிக்குவின் கருத்துகளை தொடர்ந்து சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் மீண்டும் கட்டவிழ்த்து விடப்படலாம் என்று அஞ்சப்படுகின்றது.

இன கலவரத்தை தூண்டுகின்ற வகையில் வரககொட ஞானரட்ண தேரர் கடந்த வாரம் பேசியதாக முஸ்லிம் அரசியல் சமூக பொதுநல செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். பௌத்த காடையர்களால் முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் வர்த்தக ஸ்தாபனங்கள் இலக்கு வைக்கப்பட்டு சில பல வாரங்கள் கழிந்த நிலையில் பிக்குவின் கருத்து வெளியாகி உள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்களின் எதிரொலியாகவே முஸ்லிம்கள் மீதான பிந்திய தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. இந்நிலையிலேயே குருணாகலை சேர்ந்த முஸ்லிம் வைத்தியரால் 4000 பௌத்த பெண்கள் கட்டாய கரு தடை செய்யப்பட்டு இருப்பதாக தேரர் தெரிவித்து உள்ளார்.

முஸ்லிம் வைத்தியரை கட்டாயம் கல் எறிந்து கொள்ள வேண்டும் என்று சில பெண் அடியார்கள் தெரிவித்து உள்ளனர், நான் அவ்வாறு சொல்லவில்லை, ஆனால் அதுதான் செய்யப்பட வேண்டும் என்பதாக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரான ஞானரட்ண தேரர் பேசியது தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

அத்துடன் முஸ்லிம் கடைகளில் சாப்பிட வேண்டாம், ஏனென்றால் அங்கு சாப்பிடுபவர்களுக்கு எதிர்காலத்தில் பிள்ளைகள் கிடைக்காது என்பதாகவும் கண்டியில் அடியார்கள் முன்னிலையில் பிரசங்கித்தபோது தேரர் தெரிவித்து உள்ளார். இதே வதந்தி காரணமாக கண்டியில் கடந்த வருடம் கலவரம் மூண்டது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் ஞானரட்ண தேரர் இப்போது அவரின் கருத்துகளை நியாயப்படுத்த பார்க்கின்றார். பெரும்பான்மையானவர்கள் சிந்திப்பதையே அவர் கோடிட்டு காட்டியதாக கூறுகின்றார். வெறுப்பூட்டும் வகையில் அமைந்த அவரின் பேச்சு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் அரசியல் சமூக பொதுநல செயற்பாட்டாளர்கள் கோருகின்றனர்.

முன்னிலை பிக்கு ஒருவர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசுவதும், இன விரோத விஷத்தை கக்குவதும் முஸ்லிம்களுக்கு பேரிடியாக மாறி உள்ளது, ஏனென்றால் இளைய தலைமுறையை சேர்ந்த பௌத்தர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டப்படுகின்றனர், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது ஒரு வகையான வியாபார தடையை தேரர் பிரகடனப்படுத்தி உள்ளார், முஸ்லிம் சமூகத்தை புறக்கணித்து ஒதுக்கி ஓரம் கட்டுகின்ற திட்டத்தின் ஒரு அம்சமே இது என்று முஸ்லிம் மனித உரிமைகள் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஞானரட்ண தேரரின் பேச்சு பேரதிர்ச்சியை தந்திருப்பதாக ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

முஸ்லிமகளுக்கு என்ன நடக்க போகின்றது? என்பது விளங்கவில்லை, அதை கற்பனை செய்து பார்க்க முடியாது உள்ளது, முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம்களின் சொத்துகள் மீதும் தாக்குதல்கள் நடத்துவதற்கான யுத்த பிரகடனமாகவே இதை பார்க்க வேண்டி உள்ளது என்று முஸ்லிம் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆபத்து எந்நேரமும் வரலாம் என்று எதிர்பார்த்தவாறாகவே வியாபாரத்தை செய்ய வேண்டி உள்ளது என்று முஸ்லிம் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

பிக்குமாரின் தூண்டுதல்களின் பேரில் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன, ஆகவே ஞானரட்ண தேரரின் தூண்டுதலின் பேரில் ஏதேனும் கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவே தென்படுகின்றது, இவ்வாறானவர்களின் பேச்சுக்களால் பௌத்தர்கள் உணர்ச்சி ஏற்றப்படுகின்றனர், பொதுபலசேனா போன்ற கடுமை போக்கு அமைப்பை சேர்ந்த பிக்கு ஒருவரிடம் இருந்து இவ்வாறான பேச்சு வந்திருந்தால் அதிகம் பொருட்படுத்த வேண்டி ஏற்பட்டு இராது, ஏனென்றால் பௌத்தர்களில் ஒரு சிறிய தொகையினரே அதற்கு எடுபட்டு இருப்பார்கள், ஆயினும் இது அஸ்கிரிய பீடத்தின் தலைமை பிக்குவிடம் இருந்து வெளிவந்து உள்ள செய்தியாகும் என்று சட்ட மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிருப்தியை முஸ்லிம்களுக்கு தோற்றுவித்து உள்ளது.

பிக்குவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் அமைந்ததாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன் தெரிவித்து உள்ளார். ஆயினும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது சிங்கள பௌத்த மேலாதிக்க பேரினவாதம் இந்நாட்டில் தலை விரித்தாடுவதையே காட்டுகின்றது என்றார்.

Add a Comment