குழந்தை பரிதாப மரணம்

இந்த செய்தியைப் பகிர்க

குடலில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக வயிற்றில் உண்டான உபாதைகளால் ஜெயகாந்த் கிருஷ்ணபிரசாத் – வயது 01 வருடமும் 02 மாதங்களும் என்கிற குழந்தை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இறந்து உள்ளது.

தம்பிலுவிலை சேர்ந்த இரு வருடங்களுக்கு முன் திருமணம் செய்த ஒரு தம்பதியின் ஒரேயொரு குழந்தைக்கு 22 ஆம் திகதி மாலை வயிற்றுக்குள் உபாதை ஏற்பட்டது. உடனடியாக ஊரில் உள்ள தனியார் வைத்தியர் ஒருவரிடம் காண்பித்தனர். அவர் மருந்து கொடுத்தார். ஆனால் பிள்ளைக்கு மலத்துடன் இரத்தம் வெளியேறியது.

இந்நிலையில் மறுநாள் காலை அதே வைத்தியரிடம் காண்பித்தனர். ஆயினும் அவர் சீரியஸாக எதுவும் இல்லை என்று சொல்லி அனுப்பினார். ஆயினும் மதியம் அளவில் குழந்தையின் வயிறு கடுமையாக வீங்கியது. உடனடியாக குழந்தையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிறுகுழந்தை வைத்திய நிபுணரிடம் காண்பித்தனர். குழந்தையின் குடலில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டு தீவிரம் அடைந்து உள்ளது என்பதை பரிசோதித்து கண்டு பிடித்தார்.

இதற்கான சிகிச்சை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாத்திரமே உள்ள நிலையில் குழந்தையை அம்புலன்ஸ் வண்டியில் அவரசமாக அனுப்ப நடவடிக்கை எடுத்தார். ஆயினும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அணித்தாக வந்தபோது குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் அம்புலன்ஸ் வண்டியில் உடன் பயணித்த வைத்தியர் குழந்தையை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவில் ஒப்படைத்தார். குழந்தை வோர்ட்டில் அனுமதிக்கப்பட்டு இரவு 8.45 மணி முதல் சிகிச்சை வழங்கப்பட்டது. இரவு 9.30 மணி அளவில் குழந்தை இறந்து போனது.

கல்முனைக்குடி மரண விசாரணை அதிகாரி இப்ராஹிம் நஸ்ரூல் இஸ்லாம் மறுநாள் 05 மணி அளவில் உடலத்தை போய் பார்வையிட்டு மரண விசாரணை மேற்கொண்டார். குழந்தையின் பெற்றோர், பாட்டி ஆகியோரின் வாக்குமூலங்களை பதிவு செய்தார். கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வழங்கப்பட்ட சிகிச்சைகளின் விபரங்களையும் பார்வையிட்டார். இவற்றின்படி இம்மரணம் குடலில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக வயிற்றில் உண்டான உபாதைகளால் ஏற்பட்டது என்று தீர்ப்பு வழங்கி உடலத்தை 6.00 மணி அளவில் தந்தையிடம் ஒப்படைத்தார். குழந்தையின் தந்தை முச்சக்கர வண்டி சாரதி ஆவார்.

Add a Comment